Home Business இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை; சலுகையை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை; சலுகையை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

47
0

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த முடிவால் இந்தியாவின் ஏற்றுமதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய அறிவிக்கையில், இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி எனப்படும் இந்த சலுகை காரணமாக எவ்வித வரியும் செலுத்தாமல் அமெரிக்காவில் இந்திய வர்த்தகர்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியும். இத்தகைய சலுகை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவில் போதுமான வர்த்தக வாய்ப்பை இந்தியா உருவாக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு அளித்துவரும் சலுகையை ரத்து செய்யப் போவதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி துருக்கிக்கும் இந்த சலுகையை ரத்து செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளுக்கு இத்தகைய வரியற்ற வர்த்தக சலுகை அளிக்கும் திட்டத்தை 1974-ம் ஆண்டு அமெரிக்கா அறிமுகம் செய்தது.

மொத்தம் 120 நாடுகளுக்கு இதுபோன்ற வர்த்தக முன்னுரிமை சலுகையை அமெரிக்கா அளித்துள்ளது. இந்த சலுகையின்கீழ் இந்தியா 2017-ம் ஆண்டில் 560 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மொத்தம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் இது 11 சதவீதமாகும். அமெரிக்காவுக்கு 2017-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 4,860 கோடி டாலராகும்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருப்பதாவது: இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த அதாவது வளரும் நாடுகளுக்காக வழங்கப்படும் வர்த்தக முன்னுரிமை சலுகையை (ஜிஎஸ்பி) இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக இதன் மூலம் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சலுகையால் இந்தியா, துருக்கி அடைந்து வரும் பலனுக்கு பிரதிபலனாக அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு 60 நாள்களுக்குப் பிறகுதான் செயலுக்கு வரும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக இந்தியாவின் வர்த்தக செயலர் அனுப் வாத்வான் கூறியது: இந்தியாவுக்கு அளித்துவரும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்வதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மொத்த மதிப்பில் இந்த சலுகையைப் பெறுவது 560 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள். இதில் கிடைக்கும் சலுகை 19 கோடி டாலராகும். இது மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உறுதியான தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சலுகை ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்த்த காரணத்தால் இந்திய ஏற்றுமதியாளர்கள், இதற்கு உரிய இழப்பை மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வாத்வான் தெரிவித்தார். ஜிஎஸ்பி சலுகையானது குறிப்பிட்ட அளவிலானது. இதனால் ஏற்படும் இழப்புகள் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் அதிக அளவு வரி விதிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக அந்நாட்டின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு அபரிமிதமாக வரி விதிப்பதை சுட்டிக்காட்டி, இதேபோன்று அமெரிக்காவும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஏற்கெனவே இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அலுமினியம் மீது 10 சதவீதமும், உருக்கின் மீது 25 சதவீத வரியையும் அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து 29 அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது இந்தியா கடுமையான வரியை விதித்தது. ஆனால் அதை செயல்படுத்துவதை தொடர்ந்து தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது. தற்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரவுள்ளது.

2017-18-ம் நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து 4,788 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதியாயின. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான பொருள்களின் மதிப்பு 2,661 கோடி டாலராகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here