Home Tamilnadu மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 20-ந்தேதி அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 20-ந்தேதி அறிவிப்பு

11
0

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வில் கமல்ஹாசன் தீவிரமாக இருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் யார் என்று சொந்த தொகுதியிலேயே கேட்கும் அளவுக்கு பிரபலம் இல்லாதவராக கூட இருக்கட்டும். ஆனால் தகுதியும் நேர்மையும் தான் முக்கியம் என்று உறுதியாக இருக்கிறார். அதனால் தான் நேர்காணலில் அவரே நேரடியாக பங்கேற்றார். அதுவும் காலையில் இருந்து நள்ளிரவு வரை நேர்காணல் செய்தார்.

மற்ற கட்சிகளில் நேர்காணல் செய்பவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் முக்கிய பொறுப்பாளர்கள்தான் நேர்காணல் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் கமல் கட்சியில் ஒரு பக்கம் கட்சிக்காரர்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் இருந்தனர்.

பொதுவாக ஒரு கட்சியின் நேர்காணலில் முதல் கேள்வியே “எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க?” என்பதுதான் இருக்கும். ஆனால் கமல் கட்சியில் அப்படி இல்லை. “மக்களுக்கான நற்பணிகள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள், உங்கள் தொகுதி பிரச்சனைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா?” இதுதான் முதல் கேள்வியே. இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது.

வேட்பாளர்கள் பதில்கள் சொல்ல சொல்ல, அதை அங்கு இருக்கும் குழுவினர் உடனடியாக குறித்து வைத்து கொண்டார்கள். கமலும் கையில் ஒரு பேனா வைத்து கொண்டு அதை குறிப்பெடுத்தார்.

இது நேர்காணல் போலவே இல்லை. ஏதோ ஒன்றாக உட்கார்ந்து கலந்துரையாடுவதை போல இருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் இது புதுமை.’

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கமல்ஹாசன் ராமநாதபுரத்திலும், கமீலாநாசர் மத்திய சென்னையிலும் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் போட்டியிடப்போவதாக வரும் செய்திகள்பற்றி கேட்டோம். ‘வேட்பாளர் தேர்வில் பிரபலத்தன்மையை பார்க்க கூடாது என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்.

கமீலா நாசரும், மகேந்திரனும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தான். தான் எந்த தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் போட்டி போடவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் தானே களம் இறங்குவது போல பணிபுரிய நிர்வாகிகளிடம் கமல் உறுதி வாங்கி உள்ளார்’ என்று பதில் அளித்தனர்.

கமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது இன்னும் உறுதியாகாத நிலையில் அந்த தொகுதியில் கமல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சனையை கையில் எடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

எப்போதுமே தமிழ்நாட்டின் தண்ணியில்லாக்காடு என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம் தான். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சனை உள்ளது. கட்சி ஆரம்பிக்கும்போதே, ‘உங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன, ஒரு பட்டியல் கொடுங்கள், அதை சரி செய்ய முயலுங்கள்” என்று கமல் சொன்னார். அதன்படி நாங்கள் இந்த 6 மாதமாக இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறோம்.

பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம். இந்த 6 மாதத்தில் மாவட்டம் முழுவதும் இந்த பணி விரிவடைந்துள்ளது.

இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். கமல் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here